search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து போலீசார்"

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    • வேப்பேரியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இந்த தொப்பியை பயன்படுத்தி பெண் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
    • சட்டையில் அணிந்து பயன்படுத்தப்படும் சிறிய கேமரா ஒன்றும் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஏற்கனவே ஒரு தொப்பி பயன்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில் ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் பயன்பாட்டில் இருப்பது போன்று குளிர்ச்சியான புதிய தொப்பி வாங்கப்பட்டு உள்ளது.

    பரீட்சார்த்த முறையில் இந்த தொப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொப்பியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் சிறிய மின்விசிறி அதில் பொருத்தப்பட்டிருப்பதுதான்.

    ஹெல்மெட் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த தொப்பியின் முன்பகுதியில் பிளாஸ்டிக் போன்று வடிவமைக்கப்பட்டு அதில் தான் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி உதவியுடன் இந்த மின்விசிறி செயல்படுகிறது.

    இந்த பேட்டரியை போலீசார் தங்கள் இடுப்பில் மாட்டிக்கொள்கிறார்கள். செயல்படும் மின்விசிறியில் இருந்து வெளியாகும் காற்று போலீசாருக்கு குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தும். 900 கிராம் எடை கொண்ட இந்த தொப்பி சோதனை முறையில் போலீசாரின் தலையில் மாட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    வேப்பேரியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இந்த தொப்பியை பயன்படுத்தி பெண் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

    இது பயன்படுத்துவதற்கு எப்படி உள்ளது? என்று போலீசாரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் தொப்பியை அதிக அளவில் வாங்கி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று சட்டையில் அணிந்து பயன்படுத்தப்படும் சிறிய கேமரா ஒன்றும் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற வகை கேமரா ஒன்று ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் தலைமை தாங்கினார்.
    • பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்பேரில் போலீசாருக்கு அது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் போக்குவரத்து போலீசார் 280 பேருக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    வேப்பேரி அழகப்பா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர்கள் கிறிஸ்டோபர், ரவி, சிவக்குமார் மற்றும் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை.
    • போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய சந்திப்புகளில் நின்று கொண்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணியாதது, வேகமாக செல்வது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு அபராதம் வசூலிக்கின்றனர்.

    வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். அந்த அபராதத்தை அவர்கள் உடனடியாக செலுத்துகின்றனர்.

    போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை. அவர்களிடம் 'கூகுள் பே' மூலம் பணத்தை செலுத்துமாறு போலீசார் வசூலித்து வருகின்றனர்.

    ஆனால் அதற்குரிய ரசீது வழங்குவதில்லை. அந்த பணத்தை போலீசார் தங்களது உறவினர்களின் 'கூகுள் பே' செல்போன் நம்பரில் பெற்று மோசடி செய்வது தற்போது அம்பலமாகியுள்ளது.

    சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் கடந்த மே மாதம் 9-ந்தேதி தனது குடும்பத்துடன் காரில் புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகே சென்றபோது, போக்குவரத்து சிக்னலை மீறிவிட்டதாக அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கூகுள் பே மூலம் ரூ.500 வசூலித்துள்ளார். ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படவில்லை

    இதனால் சந்தேகம் அடைந்த முரளிதரன், போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி சம்பந்தப்பட்ட கூகுள் பே எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், போக்குவரத்து போலீஸ்காரர் வசூலித்த அபராத பணம் தனிப்பட்ட நபருக்கு சென்றது தெரியவந்தது.

    அந்த போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான புதுவை சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    இதே போல் மேலும் பல சுற்றுலா பயணிகளிடம் போக்குவரத்து போலீசார் சிலர் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் பணம் வசூலித்த போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

    • போக்குவரத்து போலீசார் சோதனையில் சிக்கியது
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்க ளுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப் பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து வருகி றார்கள்.

    போக்குவரத்துக்கு இடையூறாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வடசேரி பஸ் நிலைய பகுதியில் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது. அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளுக்கு நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்காக ரூ.500 அபராதம் விதித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினமும் அங்கு சோதனை மேற்கொண்ட போது அதே இடத்தில் அந்த மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. போலீசார் மீண்டும் ரூ.500 அபராதம் விதித்தனர். இந்த நிலையில் நேற்றும் அதே இடத்தில் நின்றது. போலீசார் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து 3 நாட்களாக ஒரே பகுதியில் நோ பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. அவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த வாரம் மணிமேடை பகுதியில் கடைக்கு வந்தபோது அந்த பகுதியில் நிறுத்தி இருந்ததாகவும் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்றும் தெரிவித்தார்.

    இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தங்கவேலிடம் அவரது மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையம் பகுதியில் நிற்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசேரி போலீசாரும் சம்ப இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிளை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மாயமானது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேல் புகார் செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மணிமேடை மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • ஓட்டிகளுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகம், விலையில்லா பெட்ரோல், வெள்ளி நாணயம் ஆகியவற்றை வழங்கி பாராட்டி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்.
    • விபத்தில்லா தஞ்சை மாநகரத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நூதன முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து காவல்பிரிவு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாகவும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் , அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்துபோலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து பிரிவு பெண் காவலர்கள் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த பெண்களை தடுத்து நிறுத்தி சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து வந்தமைக்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்ண சேலைகளை வழங்கி பாராட்டினார்கள்.

    அப்போது போக்குவரத்து இன்ஸ்பெக்ர் ரவிச்சந்திரன், பேசும்போது விபத்தில்லா தஞ்சை மாநகரத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் , நூதன முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிந்து வருபவர்கள், நான்கு சக்கர வாகனங்கள் இயக்கும்போது சீட்பெல்ட் அணிபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகம், விலையில்லா பெட்ரோல், வெள்ளி நாணயம் ஆகியவற்றை வழங்கி பாராட்டி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இம்முறை தலைகவசம் அணிந்து வந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் தஞ்சை போக்குவரத்து காவல் பிரிவு பெண் காவலர்கள் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்ண சேலைகளை ஊக்கப்பரிசாக வழங்கி பாராட்டியுள்ளோம்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர் 

    • உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
    • அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகம் மாணவ, மாணவிகளை மிரள செய்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 5-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொட்டாரம்.

    இந்த ஊரின் சந்திப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றொருபுறம் அரசு தொடக்கப் பள்ளி, அதன் எதிர்புறம் தபால் நிலையம் உள்ளது. இந்த சந்திப்பில் இருபுறமும் ஓட்டல் மற்றும் கடைகளும் உள்ளன. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் மார்க்கமாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள், கார், பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் இந்த சந்திப்பு வழியாக அடிக்கடி சென்று வருகின்றன. இதனால் கொட்டாரம் சந்திப்பு பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது.

    காலை பள்ளி தொடங்கும் நேரத்திலும், மாலையில் பள்ளி முடியும் நேரத்திலும் மாணவ, மாணவிகள் இந்த ரோட்டை கடக்க பெரும் சிரமப்படுகிறார்கள். முன்பு "பீக் அவர்ஸ்" எனப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது வழக்கம். கொட்டாரம் சந்திப்பில் இரவு 8 மணி வரை போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார்கள்.

    ஆனால் சமீபகாலமாக இந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை காண முடிவதில்லை. பள்ளிக்கூடம் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் மாணவ-மாணவிகள் ரோட்டை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகம் மாணவ, மாணவிகளை மிரள செய்கிறது.

    தற்போது பள்ளிகள் திறந்து 5 நாட்களுக்கு மேல் ஆன பிறகும் இதுவரை போக்குவரத்து போலீசார், பள்ளிகள் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களே சில சமயங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். போக்குவரத்து நெருக்கடியால் பெரும்பாலான நேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது. போக்குவரத்து போலீசார் பலர் வேறு பணிகளுக்கு சென்று விடுவதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆள் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    விபத்துக்கள் அதிகரித்து வரும் வேளையில் இது போன்ற காரணங்களை காட்டாமல், பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளி முன்பு காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது.
    • போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் இன்று மதியம் கார் ஒன்று லாரன்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மயிலை மீட்டார். இதனைத் தொடர்ந்து மயில் அமர்ந்து வந்த கார் எங்கிருந்து வந்தது? எந்த ஊரை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் மீது மயில் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது.
    • பணியில் உள்ள போலீசாருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப ட்டது. இது குறித்து போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் திருநாவு க்கரசு கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால், வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய பணியில் உள்ள போலீசா ருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வை தடுக்கும் வகையில் அவர்களுக்கு காலை,மாலை, இரு வேளைகளிலும் மோர் மற்றும் பழச்சாறு கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில்,பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா அறிவுறுத்தலின்படி போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப டுகிறது. தினமும் காலை 11 மணிக்கு மோர் அல்லது பழச்சாறு, அதேபோல மாலை 3 மணிக்கு பழச்சாறு அல்லது மோர் வழங்கப்படு கிறது.இந்த மோர் வழங்கும் பணி மே மாதம் வெப்பம் தணியும் வரை கொடுக்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேலூரில் வெயிலை சமாளிக்க நடவடிக்கை
    • டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்

    வேலுார்:

    வேலுாரின் கோடைவெயிலால் பகல் மட்டுமின்றி இரவிலும் அனலின் தாக்கம் இருக்கும். இதனால், பகல் நேரத்தில் கோடைக்காலத்தில் வெளியில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து போகும். அப்படியே வெளியில் செல்பவர்களும், குடை, தொப்பி, கூலிங்கிளாஸ் என்று பாதுகாப்பு உபகரணங்களுடனே வலம் வருவார்கள்.

    சாதாரணமாக ஒருசில மணி நேரம் வெளியில் சென்று திரும்பு பவர்களுக்கே கோடையை தாங்க இத்தனை பொருட்கள் தேவைப்படுகிறது. ஆனால், காலை யில் இருந்து மாலை வரை சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரின் நிலைமையை சொல்லிமாளாது.

    அவர்கள் பாடு திண்டாட்டம்தான். கொளுத்தும் வெயிலில் வியர்வை சொட்டச் சொட்ட கடமையாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில்தான் வேலூர் மாவட்ட போலீ சாருக்கு கோடைக்காலத்தில் வெப்பம் தாங்கும் வகையிலான பெரிய அள வில் நவீன தொப்பிகள், அவ்வப்போது மோர், எலுமிச்சை பழச்சாறு போன்றவை போலீஸ்துறையால் வழங்கி வருகின்றனர்.

    இந்தமுறை போக்கு வரத்து போலீசாரின் துயர் துடைக்க தொப்பியுடன், அவர்கள் கண்களை பாதுகாக்க வசதியாக கருப்பு கூலிங்கிளாஸ் வழங்கப்படுகிறது.

    வேலூர் மக்கான் சிக்னல் அருகே போலீசாருக்கு தொப்பி மற்றும் ஜில்லென மோர் ஆகியவற்றை டி.ஐ.ஜி முத்துசாமி வழங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி கூலிங்கிளாஸ் வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதல் தொடர்ந்து 120 நாட்கள் போலீசாருக்கு தாகம் தீர்க்க மோர் அல்லது எலுமிச்சை ஜூஸ் தெர்மாகோல் தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்க உத்தரவிட்டார்.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 110 போலீசாருக்கு தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஜில்லென மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது.
    • ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்-பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது. சாலையில் நிலவும் காற்றின் தன்மை சற்று மோசமாகத்தான் இருக்கும். ஒருவர் 4 அல்லது 5 ஆண்டுகள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது காற்றின் மாசுபாடு காரணமாக அவர் பாதிக்கப்படுவார். எனவே போக்குவரத்து போலீசாருக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமான நடவடிக்கை ஆகும்.

    கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது போக்குவரத்து போலீசார்தான். எனவே போக்குவரத்து போலீசாருக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் முக்கியம்.

    முழு உடல் பரிசோதனை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அந்த விவர குறிப்புகள், இதுபோன்ற முகாம்களுக்கு வரும்போதும் பயனுள்ளதாக இருக்கும். ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம். இது போன்ற மருத்துவ முகாம்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தி அனைத்து போக்குவரத்து போலீசாரும் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், நீரழிவு, காசநோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை, எலும்புகள், பல், கண் ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றன.

    இதில் போக்குவரத்து போலீசார் 250 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சாமே சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும்,
    • போக்குவரத்து விதிகளை கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.

    கோத்தகிரி,

    புதிய போக்குவரத்து சட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த அபராத தொகை அதிகரிப்பு குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வந்த நிலையில் அதிகப்படியான வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும் போது ஏதேனும் அபராதம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே போக்குவரத்து விதிகளை தற்சமயம் கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.

    இந்த போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும், அப்படி ஓட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் நன்மை குறித்து கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    ×